₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

விழுப்புரம், மார்ச் 3: செஞ்சி அருகே லஞ்சம் வாங்கிய, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் ஊழல் தடுப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தேவதானம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). இவர் 2011-2016ம் ஆண்டில், அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி சுதா (35) என்பவருக்கு அரசு சார்பில் இந்திராகாந்தி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஆணை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் முதல் தவணை தொகை ரூ 59,541க்கான காசோலையை சுதாவிடம் வழங்க, ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், சுதாவிடம் ரூ. 10ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சுதா விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து கடந்த 21.8.2014ம் தேதி போலீசாரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை  சுதா, ஆறுமுகத்திடம் கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு  போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இவ்வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மோகன் தீர்ப்பு வழங்கினார். அதில்  ஊராட்சி தலைவர் ஆறுமுகத்திற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆறுமுகம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>