கடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை

கடலூர், மார்ச் 3: கடலூர் அருகே தாய், மகளை வெட்டி கொன்ற வழக்கில் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி (48). இவர்களது மூத்த மகள் ஜீவஜோதிக்கு திருமணம் நடந்து விட்டது. இதனால் விஜயலட்சுமி தனது இளைய மகள் சந்தியா (எ) மாதங்கி (24) மற்றும் மகன் சிவகுரு (எ) வசந்தகுமார் (20) ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்தார். சிதம்பரம் குடும்பத்துக்கு சொந்தமான நிலம் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி அடுத்த இடையார்பாளையத்தில்உள்ளது. அங்கு நடந்த சாகுபடியை விஜயலட்சுமியும், அவரது பிள்ளைகளும் அடிக்கடி சென்று பார்த்து வருவது வழக்கம். இந்த நிலம் தொடர்பாக சிதம்பரத்தின் உறவினர்களுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு விஜயலட்சுமி குடும்பத்தினருக்கு சாதகமாக வரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமியும், அவரது மகள் சந்தியாவும் வயலுக்கு சென்றபோது மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவலறிந்ததும் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், சொத்து தகராறு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பு, கூலிப்படையினரை தூண்டி இக்கொலையை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க கடலூர் ஏடிஎஸ்பி பாண்டியன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கொலை தொடர்பாக விஜயலட்சுமியின் உறவினர் ஒருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளிக்கும் தகவலின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.

Related Stories: