ஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

உளுந்தூர்பேட்டை, மார்ச் 3: ஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார விளக்க பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்கராசு, ஒன்றிய செயலாளர்கள் சீனுவாசன், ஜெயக்குமார், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன், ஆனந்தன் ஆகியோர் துவக்க உரையாற்றினார்கள். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், மோடியும், அமித்ஷாவும் சினிமாவில் நடிக்க வரவில்லை. இவர்கள் சினிமாவிற்கு வந்து இருந்தால் சிவாஜி, அமிதாப்பச்சனையே மிஞ்சி இருப்பார்கள். மிக சிறந்த தமிழ்மொழியை படிக்க வில்லை என பிரதமர் மோடி வருத்தப்படுகிறார். அவரது ஆட்சியில் அமைச்சர்கள் இந்தியில் தானே கடிதம் எழுதுகின்றனர். தமிழகத்திற்கு வந்தால் விவசாயிகளை பற்றி பெருமையாக பேசும் பிரதமர் மோடி டெல்லியில் 110 நாளாக போராடி வருகிறார்களே, 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த இடத்திற்கு சென்று பேச வேண்டியது தானே?

  வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை மாலையில் நிறைவேற்றிவிட்டு அடுத்த சில மணி நேரங்களில் அதிமுக, பாமக கூட்டணி உடன்பாடு என்கிறார். உள் ஒதுக்கீடு என்பது வன்னியர்களுக்காக அல்ல. அதிமுக, பாமக என்ற இரண்டு கட்சிகள் ஓட்டு வாங்குவதற்காக போட்ட நாடகம். அதிமுக கட்சியை உடைத்தது பாஜக தான். தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது, அதிமுக என்ற கட்சி தமிழகத்தில் இருக்க வேண்டும் என்றால், பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்தால் தான்  நடக்கும்.  நெடுஞ்சாலைதுறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு பேசினார்.

Related Stories: