விருத்தாசலம் பகுதியில் பைக்குகள் திருடிய 2 பேர் கைது

விருத்தாசலம், மார்ச் 3: விருத்தாசலம் அருகே உள்ள சின்ன பண்டாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமுருகன்(35). இவர் விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நீதிமன்றம் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு பணிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது பைக் காணவில்லை.  அதே நாளில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நிறுத்தி இருந்த உளுந்தூர்பேட்டை வட்டம் பாலி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் சிவஞானம் என்பவரின் பைக்கும் திருடு போயிருந்தது. இது குறித்து கலைமுருகன் மற்றும் சிவஞானம் ஆகியோர் விருத்தாசலம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று விருத்தாசலம் டிஎஸ்பி மோகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், புஷ்பராஜ், குமரேசன், தனிப்பிரிவு தலைமை காவலர் பாலமுருகன், விருத்தாசலம் குற்ற தனிப்பிரிவு தலைமை காவலர் சவுமியன், செல்வகுமார், தினேஷ், செல்வகுமார் மற்றும் போலீசார் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரே பைக்கில் வந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திட்டக்குடி வட்டம் ஆக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல் (20), ஆவினங்குடியை சேர்ந்த சின்னசாமி மகன் சுயம்புநாதன்(35) என்பதும், இருவரும் கலைமுருகன் மற்றும் சிவஞானத்தின் பைக்கை திருடியதும் தெரியவந்தது. மேலும் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பைக்குகள் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 பைக்குகளை  பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: