கீழ்பென்னாத்தூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டு உடைத்து ₹1.60 லட்சம், நகை திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு வலை

கீழ்பென்னாத்தூர், மார்ச் 3: கீழ்பென்னாத்தூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ₹1.60 லட்சம், 2.5 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி மனைவி கனகவல்லி(56). இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டை பூட்டிக்கொண்டு அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றிருந்தார். அங்கு பணிகளை முடித்துவிட்டு மாலை 5.30 மணியளவில் வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் ைவத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், பெட்டியில் வைத்திருந்த ₹1.60 லட்சம் மற்றும் 2.5 சவரன் நகை ஆகியன திருடுபோனது தெரியவந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, கனகவல்லி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>