திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் போர்மன்ன லிங்கேஸ்வரர் தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை, மார்ச் 3: திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில், போர்மன்ன லிங்கேஸ்வரர் கோயில் தேர் திருவிழா நேற்று நடந்தது. திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள போர்மன்ன லிங்கேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. கோயில் கருவறையில் தேர் நிலையாக எப்போதும் இருப்பதும், போர்மன்ன லிங்கேஸ்வரர் தேரில் அமர்ந்து அருள்பாலிப்பதும் தனிச்சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மகம் முடிந்த மூன்றாம் நாளில், போர்மன்ன லிங்கேஸ்வரர் கோயில் தேர் திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்த விழா கடந்த 26ம் தேதி விநாயகர் ஊர்வலத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து, பாலமுருகன் பூப்பல்லக்கு, பராசக்தி ஊர்வலம், பரிவார தேவதைகள் ஊர்வலம், சுவாமி அருள்வாக்கு போன்றவை தினமும் நடந்தது. விழாவின் நிறைவாக போர்மன்ன லிங்கேஸ்வரர் தேரோட்டம் நேற்று நடந்தது.

கருவறையில் நிலையில் இருந்த தேர், அலங்கார தோற்றத்துடன் வீதியில் பவனி வந்தததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், தங்களுடைய விவசாய நிலங்களில் விளைந்த தானியங்களை தேர் மீது வீசி வழிபட்டனர். அவ்வாறு வீசினால், அடுத்த போகத்தில் கூடுதல் விளைச்சல் ஏற்படும் என்பது நம்பிக்கையாகும்.

Related Stories: