இரட்டை விரல்களை காட்டியவாறு இருந்ததால் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலையில் கையை மட்டும் மூடிய அதிகாரிகள்

நாகர்கோவில், மார்ச் 3:  நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலை  இரட்டை விரல்களை காட்டியவாறு இருந்ததால், அந்த பகுதியை மட்டும் துணியால் சுற்றி மறைத்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மறைந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சிலைகளை மூடலாமா? என்பதில் அதிகாரிகள் குழப்பத்துடன் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், நாகர்கோவிலில் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலையை தேர்தல் அதிகாரிகள் மூடினர். பின்னர் 2 மணி நேரம் கழித்து, மீண்டும் திறந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் ஒரு கையை மட்டும் துணியால் மூடி மறைத்தனர். முழு உருவ சிலையில், எம்.ஜி.ஆர். இரட்டை விரல்களை காட்டியவாறு இருந்தார்.

இரட்டை விரலை காட்டும் பகுதியை மறைத்ததுடன், சிலையின் பீடத்தில் இருந்த இரட்டை சிலை சின்னங்களையும் மறைத்தனர். முதலில் எம்.ஜி.ஆர். சிலையில் கையை உடைத்து விட்டார்களோ? என தொண்டர்கள் நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தான் தேர்தல் அதிகாரிகள் செய்த வேலை என்பது தெரிய வந்தது. இது போன்று கை, கால்களை மறைத்து மறைந்த தலைவர்களை அதிகாரிகள் அவமதிப்பு செய்கிறார்கள். சிலை இருப்பதால் எந்த விதத்தில் தேர்தல் விதிமுறை மீறல் வந்து விட போகிறது. இன்னும் பழைய நினைப்பில் தான் அதிகாரிகள் உள்ளனர் என வேதனையுடன் கூறினர்.

Related Stories:

>