சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாமல் மீண்டும் வந்தே மாதரம் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஏற்கனவே கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் பதவியேற்ற விழாவிலும் இதேபோன்று தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாகப் பாடப்பட்டு சர்ச்சை எழுந்தது. அப்போது, “இனிவரும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படும்; இந்தத் தவறு மீண்டும் நடக்காது” என தவெக அரசு உறுதியளித்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை எழுந்திருப்பது பல தரப்பினரை கொதிப்படைய செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி-யான கனிமொழி விமர்சித்து உள்ளார். இது தொடர்பான தனது சோஷியல் மீடியா பதிவில், “இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில், மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. சென்ற முறை இதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்ட போது, ‘இனி அவ்வாறு நடக்காது’ என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
