சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கினால் நடவடிக்கை தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

பட்டுக்கோட்டை, மார்ச் 3: சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிச பொருட்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த மையத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள அறை மற்றும் வாக்குகள் எண்ணும் அறைகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் அறை, பத்திரிகையாளர்கள் அறைகளையும் ஆய்வு செய்தார். அப்போது இதற்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விபரம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான பாலச்சந்தர், பேராவூரணி தேர்தல் நடத்தும் அலுவலரும், முத்திரைத்தாள் கட்டண தனித்துணை கலெக்டருமான ஐவண்ணன், தாசில்தார் தரணிகா, பட்டுக்கோட்டை தேர்தல் துணை தாசில்தார் தர்மேந்திரா உள்பட அனைத்துதுறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள். 2,291 வாக்குச்சாவடிகளும், 595 துணை வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2,886 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி, கும்பகோணம் அரசு கல்லூரி என 3 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்த 3 இடங்களிலும் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் மூலமாக செய்துள்ள அடிப்படை வசதிகள், என்ன என்ன ஏற்பாடுகள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், அரசியல் கட்சியினர் யாரேனும் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கினால் அவைகள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் எவ்வித பாரபட்சமின்றி நடுநிலைமையுடன் நேர்மையாக தேர்தல் நடத்துவதற்கு நிச்சயமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். கண்டுகொள்ளாத அதிகாரிகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் கசிந்து ஒரு சிறிய குளம்போல் தேங்கி கிடந்தது. இதை பார்த்த கலெக்டர் குடிதண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். ஆனால் அதை சம்மந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளோ, மற்ற துறை அதிகாரிகளோ கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக குடிப்பதற்கு பல இடங்களில் தண்ணீர் கிடைக்காத இந்த சூழலில் வீணாக தண்ணீர் கசிந்து குளம் போல் காட்சியளித்தது மிகவும் வேதனையளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: