பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் சாலையோர தடுப்பு மோதி பரிதாப பலி கும்பகோணம் அருகே விபத்து

கும்பகோணம், மார்ச் 3: கும்பகோணம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் சாலையோர தடுப்பு மோதி பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை புறசங்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் இலக்கியராஜ் (20). இவர் குடந்தை அரசினர் கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். நேற்று தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேர்விற்காக அய்யம்பேட்டையில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் கும்பகோணம் சென்றார். கும்பகோணம் டைமண்ட் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே இறங்குவதற்காக படிக்கட்டில் நின்று கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு படிக்கட்டில் நின்ற இலக்கியராஜ் மீது மோதியது. இதில் கீழே விழுந்த இலக்கியராஜ் படுகாயமடைந்தார். உடனே அவரை குடந்தை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் இலக்கியராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>