கும்பகோணம் அருகே துணிகரம் ஒரே நாளில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை

கும்பகோணம்,மார்ச் 3: கும்பகோணம் அருகே ஒரே நாளில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோயில் பிரதான சாலையில் கரிகாலன்சோழன் நகர் உள்ளது. இங்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கரிகாலன்சோழன் நகர் முதல் வீதியில் ஆசிரியர் நிர்மல் என்பவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது இருசக்கர வாகனம் திருட்டு போய்யுள்ளது. இதனை போலவே இரண்டாம் வீதியில் கலா, ரமா, ராணி ஆகிய 3 பேரின் வீடுகளிலும் பூட்டுகள் உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துள்ளனர்.

கலா என்பவரது வீட்டில் இருந்து 3 சவரன் நகைகளும் 2000 ரூபாய் ரொக்கம் கொள்ளை போனதாக தெரிகிறது. ரமா மற்றும் ராணி ஆகியோர் வெளியூர்களில் இருப்பதால் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் வந்ததும் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு தெரிய வரும். இக்கொள்ளை சம்பவம் குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Related Stories:

>