தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ கொடி அணிவகுப்பு

தஞ்சை, மார்ச் 3: தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர். தேர்தலையொட்டி சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கவும், மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்கும் வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் இவ்வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாக்குசாவடிகள் முழுவதும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்பதுடன் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதற்காக டில்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை ஆவடிக்கு ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வருகை தந்தனர். அங்கிருந்து ரயில் மூலம் மத்திய துணை ராணுவப் படை உதவி கட்டளை அலுவலர் ஜெய்பிரகாஷ் யாதவ் தலைமையில் ஆய்வாளர்கள் 3, சார்பு ஆய்வாளர்கள் 6 பேர், உதவி சார்பு ஆய்வாளர்கள் 12 பேர், 12 தலைமை காவலர்கள் என 61 வீரர்கள் என மொத்தம் 94 பேர் நேற்று முன்தினம் இரவு தஞ்சை வந்து சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை துணை ராணுவத்தினர் தஞ்சையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தஞ்சை அரண்மனை திடலிலிருந்து கீழவீதி, பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்திஜி சாலை வழியாக ரயிலடி வரை அணிவகுப்பு நடத்தினர். இதில் தஞ்சை டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories:

>