பணி நிரந்தரம் செய்ய கோரி கால்நடை பண்ணை தொழிலாளர்கள் வலியுறுத்தல்

தஞ்சை, மார்ச் 3: ஈச்சங்கோட்டை நடுவூர் கால்நடை பண்ணைகளில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்ற தினக்கூலி பணியாளர்ககளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஒரத்தநாடு தாலுகா நடுவூர் ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் நேரடியாக நியமிக்க அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டது.இதனை கண்டித்தும் பல ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரப் படுத்த வேண்டும்.தினக்கூலி ரூ600 ஆக உயர்த்த வேண்டும்.பணி பாதுகாப்பளிக்க வேண்டும்.

சுயஉதவிக்குழு மூலம் பணி வழங்குகின்ற மோசடி முறையை கைவிட்டு நேரடியாக பணி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் ஏஐடியூசி தொழிற் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்து முறையாக தேர்தல் நடத்தும் அதிகாரியான தஞ்சாவூர் கோட்டாட்சியரிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மிகவும் காலதாமதமாக தெரிவிக்கப்பட்டது. எனவே நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கூடிவிட்ட நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம், சங்க மாநில செயலாளர் அரசப்பன், அரசு போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் துரை மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்கத்தலைவர் முத்துகுமரன், வடுவூர் பகத்சிங், அமுதா, சுப்பிரமணியன் ஈச்சங்கோட்டை மார்கண்டன், சிவா, நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். புதிதாக அமையவுள்ள அரசு இந்த ஏழை எளிய தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Related Stories: