கந்தர்வகோட்டை புதுநகரில் எண்ணெய் வித்து சாகுபடி பயிற்சி

புதுக்கோட்டை, மார்ச் 3: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் புதுநகர் கிராமத்தில் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி வேளாண்மை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்பரசன் வரவேற்று, வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை துணை இயக்குநர் ரவிச்சந்திரன், தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களின் தேவை, உற்பத்தி மற்றும் மத்திய அரசு நிதி உதவியுடன் எண்ணெய் வித்து உற்பத்தியை பெருக்கிட செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும், கடலை பயிருக்கு ஜிப்சம் இடும் முறைகள் குறித்தும் விளக்கினார். தேசிய பயறுவகை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி முனைவர் நெல்சன் நவமணி, எண்ணெய் வித்து பயிர்களான கடலை, எள், சூரியகாந்தி, தென்னை, எண்ணெய்ப் பனை சாகுபடி நுட்பங்களை விளக்கிக் கூறினார். பயிற்சியில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்க ஆலோசகர் திருப்பதி எள் மற்றும் எண்ணெய் தரும் மரப் பயிர்கள் குறித்து விளக்கினார். சிறந்த முறையில் கருத்துக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேளாண்மை அலுவலர் சபிதா மற்றும் துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியன் விதை நேர்த்தி மற்றும் ஜிப்சம் இடும் முறைகள் பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினார். பயிற்சியில் புதுநகர் கிராமத்தை சுற்றியுள்ள 30 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் ரெகுநாதன், சங்கர், செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: