வங்கிகளில் சந்தேகப்படும் வகையில் பண பரிவர்த்தனை நடந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு

புதுக்கோட்டை, மார்ச் 3: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் சந்தேகப்படும் வகையில் பண பரிவர்த்தனை நடந்தால் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுமென ஆலோசனை கூட்டத்தில் வங்கியாளர்களுக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கால அட்டவனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்தல் பிரசாரத்தின்போது சமமான, ஆரோக்கியமான போட்டியிடும் சூழலை அனைத்து வேட்பாளர்களுக்கு இடையே உருவாக்கவும் பணம், பொருட்கள் மூலமாக வாக்காளர்களுக்கு இடையே தேவையற்ற செல்வாக்கு செலுத்துவதை தடுக்கவும் பல்வேறு அறிவுரை, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பண பரிவர்த்தனை நிகழும்போது அதுகுறித்த தகவல்களை வங்கியாளர்களிடம் இருந்து பெற மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வங்கி கணக்கில் கடந்த 2 மாதங்களாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென சந்தேகத்துக்கு இடமான வகையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விபரங்களை உடனடியாக வங்கியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

இதேபோன்று வேட்பாளர், அவரது மனைவி, அவரை சார்ந்தோர் வங்கி கணக்குகள் மற்றும் அரசியல் கட்சியினர் வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் வரவு, பற்று செய்யப்பட்டாலும், மேலும் ஒரு வங்கி கணக்கிலிருந்து பல்வேறு நபர்களின் வங்கி கணக்குக்கு தேர்தல் காலத்தின்போது பண பரிவர்த்தனை நடந்தாலும் அதுகுறித்த தகவல்களை வங்கியாளர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: