2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல் போராட்டம்

அறந்தாங்கி, மார்ச் 3: அறந்தாங்கி அருகே 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேசன் கடையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அறந்தாங்கி அடுத்த கோங்குடியில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் கோங்குடியை சேர்ந்த 80 ரேசன்கார்டுதாரர்களும், யோகாம்பாள்புரம், அத்தாணி, ஆவாகுளம், மணவயல், அல்லம்பட்டி, தாளிச்சேரி பகுதியை சேர்ந்த 240 ரேசன்கார்டுதாரர்களும் பொருட்களை வாங்கி வந்தனர். கோங்குடியில் உள்ள ரேசன் கடைக்கு யோகாம்பாள்புரம், அத்தாணி, ஆவாகுளம், மணவயல், அல்லம்பட்டி, தாளிச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் நீண்டதூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கி வர வேண்டியுள்ளது.

எனவே யோகாம்பாள்புரத்தில் ரேசன் கடை திறக்க வேண்டுமென யோகாம்பாள்புரம், அத்தாணி, ஆவாகுளம், மணவயல், அல்லம்பட்டி, தாளிச்சேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து 2018- 19ம் ஆண்டு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் யோகாம்பாள்புரத்தில் ரேசன் கடை கட்டப்பட்டது. ரேசன் கடை கட்டியபோதும் அதை திறக்கவில்லை. எனவே கோங்குடியில் இருந்து யோகாம்பாள்புரம், அத்தாணி, ஆவாகுளம், மணவயல், அல்லம்பட்டி, தாளிச்சேரி பகுதியை சேர்ந்தவர்களின் ரேசன் கார்டுகளை பிரித்து யோகாம்பாள்புரத்தில் கட்டப்பட்ட கடையில் பொருட்களை வழங்க வேண்டுமென மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் தமிழக அரசு, யோகாம்பாள்புரம் ரேசன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் யோகாம்பாள்புரத்தில் ரேசன் கடை திறக்கப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக நேற்று காலை யோகாம்பாள்புரம், அத்தாணி, ஆவாகுளம், மணவயல், அல்லம்பட்டி, தாளிச்சேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேனர் வைத்திருந்தனர். இதைதொடர்ந்து ரேஷன் கடையை திறந்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி செல்லும் மெயின்ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த தகவல் கிடைத்ததும் அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், போலீஸ் எஸ்ஐ ரேஷ்மா உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் யோகாம்பாள்புரம் பகுதியில் உள்ள ஒரு பொது இடத்தில் வைத்து ரேசன் பொருட்களை தற்காலிகமாக வழங்கப்படும்.

தேர்தல் முடிந்த பின் யோகாம்பாள்புரத்தில் கட்டப்பட்டுள்ள ரேசன் கடையை திறந்து அந்த கடை மூலம் யோகாம்பாள்புரம் உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங் உறுதியளித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். ரேசன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: