×

கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகை

இடைப்பாடி, மார்ச் 3: இடைப்பாடி அருகே கூட்டுறவு கடன் சங்கத்தை மகளிர் சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிர்வாகி மீது பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டி அக்கரகாரம் ஊராட்சியில் உள்ள மேட்டாங்காட்டில் கல்வடங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் ஒகிலிப்பட்டி, கொட்டாயூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கடன் வாங்கி, அதனை முறையாக திருப்பி செலுத்தி வந்துள்ளனர்.

இதில், குறிப்பிட்ட சில குழுவினர் 7 மாதங்களுக்கு முன்பு கடனை முழுவதுமாக செலுத்திய நிலையில், மீண்டும் கடன் கேட்டு முறையிட்டுள்ளனர். ஆனால், சங்க நிர்வாகம் காலதாமதம் செய்து வந்துள்ளது. ஒவ்வொருவரும் தலா ₹10 ஆயிரம் வீதம் குழு ஒன்றுக்கு ₹1.20 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்துள்ள நிலையில், கடன் வழங்காததால் உறுப்பினர்கள் அதிருப்பதி தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாளான கடந்த 26ம் தேதி கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பினை கேட்டு கல்வடங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மகளிர் குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். கடன் கேட்டு நடையாய் நடந்த நிலையில், கடந்த 7 மாதத்திற்கு முன்பு வழங்கியிருந்தால், முதல்வரின் அறிவிப்பால் தாங்களும் பயனடைந்திருப்போம் என  தெரிவித்து நேற்று மதியம் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சங்கம் முன் திரண்டனர். பின்னர், முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் குதித்தனர். மேலும், அங்கிருந்த சங்க செயலாளர் ராஜாமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கூறும்போது, ஒரு குழுக்களுக்கு தலா 12 பேர் வீதம் 60 பேருக்கு மேல் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். வாங்கிய கடனை முழுவதுமாக செலுத்தி உள்ளோம். கடந்த 7 மாதங்களாக நாங்கள் செலுத்திய டெபாசிட் தொகை தலா ₹10 ஆயிரம் வீதம் கடன் சங்கத்தில் இருப்பில் உள்ளது. செயலாளர் ராஜாமணியிடம் மகளிர் சுய உதவிக்குழு கடன் கேட்டு சென்றபோது காலம் தாழ்த்தி வந்தார். இந்த வாரம் பார்க்கலாம். அடுத்த வாரம் பார்க்கலாம் என்று கூறி வந்த நிலையில், கண்டிப்பாக கடன் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில் கடந்த 26ம் தேதி மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். எங்களுக்கு கடன் அளித்திருந்தால் அரசு உத்தரவின்படி தள்ளுபடி ஆகியிருக்கும். அனால், கடன் கொடுக்காததால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளோம்.

எனவே, தலா ₹10 ஆயிரம் வீதம் செலுத்திய டெபாசிட் தொகையை திருப்பி வழங்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக செயலாளர் ராஜாமணியிடம் கேட்டபோது, குழு தலைவர்கள் வந்து சரியான ஆதாரங்களை கொடுக்காததால் தான் கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எங்கள் தரப்பில் காலதாமதம் எதுவும் செய்யவில்லை. அவர்கள் தரப்பில் முறையாக விண்ணப்பித்திருந்தால் கடன் வாங்கியிருக்கலாம். பயன் கிடைக்காத ஆத்திரத்தில் அவர்கள் தேவையில்லாத குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள். டெபாசிட் தொகையை முறையாக கேட்டால் திருப்பி கொடுக்கப்படும் என்றார்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை