பாஜ காலண்டர்கள் பறிமுதல்

குமாரபாளையம், மார்ச் 3: தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி குமாரபாளையத்தில், பக்தர்களுக்கு விநியோகித்த பாஜ காலண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குமாரபாளையம் காளியம்மன் கோயில் கடந்த 10 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று காலை குண்டம் இறங்குதல்,பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதனையொட்டி ஒருவாரமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்நிலையில், நேற்று பாஜகவினர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்சி சின்னம், பிரதமர் மோடி படம் அச்சிட்ட காலண்டர்களை இலவசமாக விநியோகித்தனர். இதை கண்ட அங்கிருந்தவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும் போது,இது போன்ற இலவச பொருள் விநியோகம் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்ஐ யுவராஜ், அங்கு வைக்கப்பட்டிருந்த 900 காலண்டர்களை பறிமுதல் செய்தார்.

காலண்டர்களை விநியோகம் செய்த பாஜ நகர துணைத்தலைவர் கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், எந்த அரசியல் கட்சியினரும் பொதுமக்களுக்கு இலவச பொருட்களை வழங்க கூடாது, மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.   

Related Stories: