திருமண மண்டப உரிமையாளர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

கிருஷ்ணகிரி, மார்ச்.3: கிருஷ்ணகிரி  மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருமண மண்டபம் மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்கள், மேலாளர்களுடன் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம் மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்கள் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் சார்பில் கூட்டம் நடத்தினால் அத்தகவலை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் பிரிவில் தெரிவிப்பதோடு பட்டியல் தொகை தகவலையும் அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்பு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த நபர்கள் தங்களது திருமண மண்டபத்தில் தங்க வைக்க அனுமதி வழங்க கூடாது. தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளலாம். எனவே, நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த திருமண மண்டபம், தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவினத்தை கண்காணிக்க கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காணிப்பு குழுவால் வாக்குப்பதிவு நடைபெறும் வரை 24 மணி நேரமும் செயற்கைகோள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் கண்காணிக்கப்பட உள்ளது. உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை விளம்பரம் செய்யும் முன் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு விளம்பரம் குறித்த விவரங்களை 2நகல்களையும், விளம்பரம் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டதற்கான செலவினத் தொகைக்கான பட்டியல் போன்றவற்றை உரிய படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.

இதை கண்காணிப்பு குழு பார்வையிட்டு ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான கலெக்டர் அதற்கான அனுமதியினை வழங்குவார். எனவே, உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு சான்றொப்பம் பெற்ற பின்னரே தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும். உரிய அனுமதி பெறாமல் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, உரிய அனுமதி பெற்று தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள், மேலாளர்கள், உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: