தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள்

கிருஷ்ணகிரி, மார்ச் 3: கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனம் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொட்ரபு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனம் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.

பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்த குறும்படம், மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் முதியோர்களுக்கான வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்த குறும்படங்கள், தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா, ரோபோசங்கர் போன்ற பிரபலங்களின் விழிப்புணர்வு குறும்படங்கள் என 32 குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான குறும்படங்களை கண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜபிரகாஷ், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>