×

காரில் கொண்டு வந்த ₹86 ஆயிரம் பறிமுதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 3: ஆந்திர மாநில எல்லையில் உள்ள குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் காரில் கொண்டு வந்த ₹86 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் பணம், பரிசு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறதா? என கண்காணித்து வருகின்றனர். அதன்படி, ஆந்திர மாநில எல்லையில் உள்ள பர்கூர் தாலுகா குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடியில் பர்கூர் பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ, போலீஸ் எஸ்எஸ்ஐ கார்மேகம், ஏட்டு குமார் உள்ளிட்டோர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் போச்சம்பள்ளி அருகே உள்ள கமலாபுரத்தைச் சேர்ந்த சகாதேவன்(35) மற்றும் 6 பேர் இருந்தனர். அவர்கள் ₹86 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்தபோது, ஆந்திர மாநிலத்தில் மாடு வாங்குவதற்காக அவர்கள் பணத்துடன் சென்றது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது