பாப்பாக்குடி,மே 20: திருப்புடைமருதூர், முக்கூடல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் இரண்டாவது நாளாக கலெக்டர் சுகுமார் திடீரென ஆய்வு செய்தார். அப்ேபாது ஆற்றில் கழிவு துணி, ஷாம்பு, சோப்பு கவர்களை வீசினால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட 4 மாவட்டங்களில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. அதில் குறிப்பாக முக்கூடல் பகுதியில் இருந்து ஏராளமான கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.
தாமிரபரணி ஆற்றில் கழிவுகளை திறந்து விடுவது, துணிகள், குப்பைகளை விட்டு செல்வதாலும், குளிக்க வருவோர் ஷாம்பு, சோப்பு கவர்களை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசி சென்று விடுகின்றனர். இதனால் பாபநாசத்தில் இருந்து பல்வேறு இடங்களில் தாமிரபரணி ஆறு மாசடைந்து வருகிறது. குறிப்பாக திருப்புடை மருதூர், முக்கூடல் போன்ற பகுதியில் கோடைகாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கான குடும்பத்தினருடன் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோர் சோப்பு, ஷாம்பு உபயோகப்படுத்தி அதன் கவர்களையும், கடைகளில் உணவு பொருட்கள் வாங்கி வந்து அதன் கழிவுகளையும், வீட்டில் உபயோகப்படுத்திய பழைய துணிகளையும் ஆற்றில் வீசி மாசு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதன்பேரில் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென திருப்புடைமருதூர் மற்றும் முக்கூடல் பகுதிகளில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார். அப்போது ஆற்றில் மாசுபடுத்துவோர் மீது அபதாரமும் கடுமையான காவல்துறை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தாமிரபரணி ஆற்றின் அனைத்து முக்கிய பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறையினர், போலீசார் உள்ளிட்ட துறையினரை ஆய்வு செய்து மாசுபடாமல் இருக்க நடவடிக்கைகள் இருக்க அறிவுறுத்தியுள்ளேன்.
தர்ப்பணம் கொடுப்பவர்கள் சூடு செய்த மண்பானைகளை போடுவது மட்டுமின்றி சிலர் இறந்தவர்களின் புகைப்படங்களை வீசுவதால் அதன் கண்ணாடிகள் உடைந்து தூய்மைப்படுத்துபவர்களின் கால்களை சேதப்படுத்துகிறது. இதனால் நேற்றிலிருந்து அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளோம். நேற்று விகேபுரம் நகராட்சியில் ரூ.3000 ஸ்பாட் பைன் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆறுகளில் குப்பைகளை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவித்துள்ளோம். திரும்ப, திரும்ப செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் தெரிவித்துள்ளோம்.
சட்டப்படி நடவடிக்கைகள் தொடரும். பொதுமக்கள் இதற்கான பொறுப்புணர்வை உணர வேண்டும். என்றார். ஆய்வின் போது மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் முருகன், சேரன்மகாதேவி துணை கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதிகாரிகளுக்கு கலெக்டர் டோஸ்
தாமிரபரணி ஆற்றில் துணி கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் ஆறு மாசடைந்ததாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் கலெக்டர் சுகுமார் ஆய்வு செய்து வருகிறார். நேற்று முன்தினம் பாபநாசம் பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். இரண்டாவது நாளாக நேற்று திருப்புடைமருதூர், முக்கூடல் பகுதியில் தாமிபரணி ஆற்றில் ஆய்வு செய்தார். அப்போது பல இடங்களில் குப்பைகள் அதிகமாக காணப்பட்டது. நீர் நிலைக்கு வெளியேயும். நீர் நிலையிலிருந்து அதிகளவில் குப்பைகள் இருந்தது. இதனால் அதிகாரிகளை கடிந்து கொண்ட நெல்லை மாவட்ட கலெக்டர் அதனை உடனே அகற்றும் படியும் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபடவும் உத்தரவிட்டார்.
கடையம் பகுதியில் விதிகளை மீறி செங்கல்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் கடையம்,மே 20: கடையம் பகுதியில் விதிகளை மீறி செங்கல்களை கொண்டு செல்லும் டிராக்டர்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கடையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான செங்கல்கள் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் கட்டுமான பணிகளுக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இவை பெரும்பாலும் டிராக்டர்கள் மூலம் அரசு விதிமுறைகளை மீறி அதிகளவில் அடுக்கி ஏற்றி செல்லப்படுகிறது. இதனால் சாலையில் செல்பவர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த வாகனங்கள் சாலையில் மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்கிறது. மேலும் செங்கலை ஏற்றி செல்லும் வாகனங்களால் எதிரே வரும் வாகனங்களும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மேலும், அதிகமாக அடுக்கப்பட்ட செங்கல்கள் எந்த நேரத்திலும் சாலையில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல்களை ஏற்றி செல்லும் வாகனங்களை கடந்து செல்லும் போது பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் தான் செல்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் போலீசார் கண்டுகொள்வதில்லை.
இதனால் செங்கல் சூளைகளில் இருந்து வாகனங்களில் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “கடையம் பகுதியில் செங்கல் ஏற்றிய டிராக்டர்கள் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக செங்கல்களை அடுக்கி கொண்டு செல்கின்றன.
இது எங்களது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. செங்கல்கள் சரிந்து விழுந்தால் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே கடையம் காவல்துறையினர் இத்தகைய வாகனங்களை தொடர்ந்து சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையம் பகுதியில் செங்கல் சூளை வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால் காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தலையிட வேண்டும். விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றனர்.
