கடையத்தில் குடிநீர் குழாய் உடைப்பால் சேதமடைந்த சாலை: அரைகுறையாக சீரமைக்கப்பட்டதால் வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்

 

கடையம், மே 20: கடையத்தில் இருந்து மாதாபுரம், பொட்டல்புதூர் வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பிரதான குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் நிலை தொடர்கிறது. சமீபத்தில் கடையம் பேருந்து நிலையம் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து மேல் மட்டத்தில் ஜல்லி மற்றும் மெட்டல் போட்டு அறைகுறையாக சாலையை சீரமைத்தனர்.

இதனால் அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் போது ஜல்லிகள் சிதறி அருகேயுள்ள கடைகளுக்குள் புகுந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு காயங்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து வருகின்றனர். ஆனால் இது குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடையம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் வழுக்கி விழுவது தொடர்கதையாகி வருகிறது.

அங்கு பாதுகாப்பில் இருக்கும் போலீசார் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவதை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பெயரளவுக்கு அரைகுறையாக சீரமைக்கப்பட்டதால் இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அப் பகுதியில் தார் சாலை அமைக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

 

Related Stories: