வரி விளம்பரங்கள் ஞாயிறுதோறும் படியுங்கள் தேர்தல் பாதுகாப்பு பணி திருவானைக்காவல் அருகே கவுத்தரசநல்லூரில் கொத்திப் போட்டதோடு நிறுத்தப்பட்ட சாலை பணி

திருவெறும்பூர், மார்ச் 3: திருவானைக்காவல் அருகே  அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கிளிக்கூடு ஊராட்சி. இந்த ஊராட்சி திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையாக உள்ளது. இந்நிலையில் கிளிக்கூடு ஊராட்சிக்குட்பட்ட கவுத்தரசநல்லூர் பகுதியில் ஊராட்சி நிதியில் சிமெண்ட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன் தொடங்கியது. அதற்காக ஏற்கனவே இருந்த சிமெண்ட் சாலையை பெயர்த்து போட்டுள்ளனர். அப்படி கொத்திப்போடப்பட்ட சாலையை சரியாக மட்டம் செய்து ரோலர் வைத்து அழுத்தாமல், புதிய சாலை அமைக்கும் பணியும், மழைநீர், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்றது. இந்த பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். புதிதாக அமைத்த சிமெண்ட் சாலை பணியும் அரைகுறையாக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாதபடி சிமெண்ட் சாலை காரைகள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணி தொடர்ந்து நடைபெறுமா அல்லது அப்படியே போட்டுவிட்டு போய் விடுவார்களா என தெரியாமல் அப்பகுதி மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அந்தநல்லூர் பிடிஓவிடம் பலமுறை முறையிட்டும் அவர்களும் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இது பற்றி அந்தநல்லூர் பிடிஓ நிர்மலாவிடம் கேட்டபோது, கவுத்தராசநல்லூரில் தற்போது அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ஒருபுறம் மட்டுமே ஏற்கனவே இருந்ததாகவும், அது அமைப்பதற்காகதான் ஊராட்சி நிதியின் கீழ் அனுமதி பெற்று பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் அந்த பணியை செய்யும் ஒப்பந்தகாரர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பணி தடைபட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி விரைவில் பணியை முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எனவே அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>