×

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

 

நாமக்கல், மே 20: நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 2026-27ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 5 தொடக்கப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. களங்காணி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, அ.பாலப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நவணி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, பாப்பிநாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, அகரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, அ.பாலப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, களங்காணி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி கூறியதாவது: கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில உள்ள அ.பாலப்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை, தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதே போல், 6 முதல் 12ம் வகுப்பு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில 7.5 சதவீத முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாட நூல்கள், பாட குறிப்புகள், நான்கு இணை சீருடைகள், புத்தக பை, வண்ண பென்சில்கள், காலணிகள் கிரையான்ஸ்,

நில வரைபடம், கணித உபகரண பெட்டி, பேருந்து பயண அட்டை, ஆதிதிராவிட நல ஊக்கத்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை, தூய்மை பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, திறனித்தேர்வு ஊக்கத்தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள் மற்றும் ஊக்கத்தொகை, சத்தான சத்துணவுடன் வாரம் 5 முட்டைகள் போன்றவை வழங்கப்படுகிறது. எனவே, 5 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியரை பெற்றோர்கள் அருகாமையில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Aadiravidar Welfare Schools ,Namakkal ,Aditravidar Welfare Schools ,
× RELATED விவசாயியின் டூவீலரை எரித்த வாலிபர் கைது