திருவாரூர், மே 20: திருவாரூர் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் கிடைக்காமல் தட்டுபாடு இருந்து வருவதால் அதனை நிவர்த்தி செய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமார் 69 ஆயிரத்து 336 லிட்டரும் மற்றும் பால் பொருட்களின் விற்பனை மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.1 கோடி அளவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 57 பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் நாள் ஒன்றுக்கு 44 ஆயிரத்து 875 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு அதில் உள்ளூர் விற்பனையான 20 ஆயிரத்து 995 லிட்டர் போக மீதமுள்ள 23 ஆயிரத்து 880 லிட்டர் பால் தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
