மன்னார்குடி,மே 20: திருவாரூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி அருள்செல்வம் தலைமையில் இணைய வழி குற்றங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணைய வழி மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து ஏமாறாமல் இருப்பது எப்படி, ஏமாற்றப்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சைபர் கிரைம் எஸ்ஐ பாலமுருகன் கூறியது: எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் பெறப்படும் செயலிகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். சிம் கார்டு காலாவதியாக போகிறது சேவையை தொடர் லிங்கை கிளிக் செய்ய சொன்னால் கிளிக் செய்யக்கூடாது. ஆன்லைன் பரிவர்தனைகளுக்கு எப்போதும் https முகவரி கொண்ட இணைய தளத்தை பயன்படுத்துங்கள். ஆன்லைன் மூலம் அறிமுகம் ஆகும் நபர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை அனுப்புவதை தவிர்க்கவும். பிரவுசிங் செண்டர்களில் உள்ள கணினிகளை பயன்படுத்தும் போது பதிவிறக்கம் செய்யப்பட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் கவனமாக நீக்கி விட வேண்டும். ஓஎல்எக்ஸ், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்றவற்றில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பதாக கூறினால் அதனை நம்பி பணம் கட்டக்கூடாது.
