திருச்சியில் அனுமதியின்றி பாஜக யாத்திரை பேரணி போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி

திருச்சி, மார்ச் 3: திருச்சியில் அனுமதியின்றி பாஜக  விஜய் சங்கல்ப யாத்திரை பேரணி நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பாஜக சார்பில் திருச்சியில் விஜய்சங்கல்ப யாத்திரை பேரணி நடத்த போலீசாரிடம் பாஜகவினர் அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் அதையும் மீறி சத்திரம் பகுதியில் உள்ள பள்ளி அருகே நேற்று யாத்திரை துவங்கியது. யாத்திரைக்கு மாநில இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டனர். பள்ளி அருகே துவங்கிய பேரணி சத்திரம் பஸ் நிலையம், தெப்பக்குளம் வழியே மேலப்புலிவார்டு ரோடு தேவர்ஹால் அருகே முடிவடைந்தது. அங்கு கிழக்கு சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தை இணைபார்வையாளர் சுதகார்ரெட்டி திறந்து வைத்தார். முன்னதாக பள்ளி அருகில் இருந்து துவங்கிய சங்கல்ப யாத்திரை பேரணி அதிகளவில் கட்சி கொடியுடனும், காரில் கொடி கட்டியும் திரண்டனர். இந்த யாத்திரையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ேதர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், அவற்றை கண்டு கொள்ளாமல் பாஜகவினர் பேரணி நடத்தினர். 2 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மட்டுமின்றி பஸ் பயணிகள் சொல்ல முடியாத கடும் வேதனையடைந்தனர்.

500 பேர் மீது வழக்கு

திருச்சியில் போலீஸ் அனுமதி மீறி விஜய் சங்கல்ப யாத்திரையில் கலந்துகொண்ட மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார், சிறப்பு விருந்தினர் பாஜக மாநில இணை பார்வையாளர் சுதாகர்ரெட்டி, நிர்வாகிகள் நடிகை குட்டி பத்மினி, ஓய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி உள்பட 500க்கும் மேற்பட்டோர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>