வடக்கு தொகுதி வேட்பாளர்கள் 24 மணி நேரத்தில் பிராசார அனுமதி பெற என்கோர் ‘ஆப்’ அறிமுகம்

திருப்பூர், மார்ச் 3: சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் பிரசார அனுமதி பெற என்கோர் ஆப் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.  ஆகையால், அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்வது, போஸ்டர் ஒட்டுவது உள்ளிட்டவைகளுக்கு அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.

இதற்கு, 8 துறை அதிகாரிகளிடம் அவர்கள் அனுமதி பெற வேண்டும். அதற்கு, சற்று காலதாமதம் ஏற்படும். இத்தகைய கால விரயத்தை குறைக்கும் வகையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருக்காக சுவிதா ஆப் ஒன்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தயார் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் அரசியல் கட்சியினர் அனுமதி பெற்றனர்.

தற்போது அதிகாரிகள் விரைவில் அனுமதி வழங்கும் வகையில் திருப்பூர் வடக்கு தொகுதியில் புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை, திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் அறிமுகம் செய்து, அரசியல் கட்சியினருக்கு தெரிவித்தார். இதனை ஷேக் பரீத் என்பவர் வடிமைத்துள்ளார். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வீடு, வீடாக பிரசாரம் செய்ய,  தெருமுனை பிரசாரம், பொதுக்கூட்டம், ஒலிப்பெருக்கி பயன்படுத்துதல், வாகனங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட 17 வகையான தேவைகளுக்கு அதிகாரிகளிடம் அனுமதி வாங்குவார்கள். இதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் //suvidha.eci.gov.in/ என்ற ஆப் மூலம் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களுக்கு தேவையான அனுமதி பெற விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து அவர்களுக்கான அனுமதி பெற பல்வேறு துறைகளுக்கு விண்ணப்பம் அனுப்பி வைப்பதால், காலதாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது அதிகாரிகளிடம் 24 மணி நேரத்திற்குள் அனுமதி கிடைக்கும் வகையில் வருவாய்த்துறை, போலீசார், பொதுப்பணித்துறை,  தீயணைப்பு, மாநகராட்சி போன்ற 8 துறை அதிகாரிகளை உள்ளடக்கிய வகையில், என்கோர் என்ற ஆப் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவிதா ஆப் மூலம் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது, நேரடியாக இந்த விண்ணப்பம் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் என்கோர் ஆப் மூலம் சென்று விடும். அவர்கள் இதற்கான அனுமதி வழங்கியவுடன், இந்த தகவல் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வந்துவிடும். இந்த என்கோர் ஆப் மூலம் 24 மணி நேரத்திற்குள் பிரசாரத்திற்கு அனுமதி வழங்க முடியும், என்றனர்.

Related Stories:

>