கூட்டுறவு வங்கியில் விளம்பர பலகை அகற்றம்

வலங்கைமான் மார்ச் 3:வலங்கைமானில் தினகரன் செய்தி எதிரொலியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் எதிரே இருந்த அரசு விளம்பர பலகையை அதிகாரிகள் அகற்றினர். தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என கடந்த வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் நடைமுறை உடனே நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் வலங்கைமானில் உள்ள நன்னிலம் எம்எல்ஏ அலுவலகம் மற்றும் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குழு தலைவரின் அறை ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களில் இருந்த தலைவர்களின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன.

இருப்பினும் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள அலுவலகத்தில் தலைவர்களின் புகைப்படங்கள் இதுவரை அகற்றப்படவில்லை .மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தின் வெளியே அரசியல் பிரமுகர்களின் புகைப்படத்துடன் கூடிய விளம்பர பலகையும் அகற்றப்படவில்லை. இக்கூட்டுறவு சங்கத்திற்கு அதிமுக நகரச் செயலாளர் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அரசியல் பாரபட்சமின்றி மேலும் காலதாமதமின்றி தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வலங்கைமான் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதில் அரசு அலுவலர்கள் மெத்தனம் காட்டுவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர் என தினகரனில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே இருந்த அரசு விளம்பரப்பலகை அப்புறப்படுத்தப்பட்டது.

Related Stories: