×

அரசு மானிய உதவியுடன் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்கலாம்: கலெக்டர் தகவல்

 

நாகர்கோவில், மே 20: குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கிற்கிணங்க தண்ணீர் உயிருக்கும் பயிருக்கும் ஆதாரம். எனவே தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வழிமுறைதான் நுண்ணீர் பாசனம் திட்டம். துளி நீரில் அதிக பயிர் என்பதே இதன் நோக்கம். இத்திட்டத்தில் சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம். சொட்டு நீர் பாசனத்தில் நீரை குழாய்கள் மூலம் பயிரின் வேர்பகுதிகளில் சொட்டு சொட்டாக விழச் செய்வதன் மூலம் கோடையில் குறைந்த தண்ணீரைக்கொண்டு அதிக பரப்பில் சாகுபடியாகவுள்ள பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாத்து அதன் மகசூலை பெருக்கலாம்.

பயிருக்கு தேவையான பாசன நீர் அறிவியல் முறையில் கணக்கிடப்பட்டு சரியான அளவு மட்டுமே அளிக்கப்படுகிறது. வேர்ப்பகுதியில் மட்டுமே நீர் பாய்வதால் பாசன நீர் வீணாகாமல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் களைச்செடிகளுக்கு நீர் மற்றும் உரச்சத்து கிடைக்காததால் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் நீரில் கரையும் உரம், மருந்துகளை நுண்ணீர்ப் பாசன அமைப்பு மூலம் பயிருக்கு அளிப்பதன் மூலம் ஆட்செலவு குறையும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2026-27ம் நிதியாண்டில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் உத்தேச நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், அடங்கல், சிறு குறு விவசாயியாக இருப்பின் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்று, ஆதிதிராவிடர் பழங்குடியினர் சான்று போன்ற ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகி திட்டத்தின் முழுப்பலனையும் பயன்பெறலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Nagercoil ,Kumari ,District Collector ,Azhugudi Meena ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்