வாக்களிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 3 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஊட்டி, மார்ச் 3: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் பொதுமக்கள் இவிஎம்., இயந்திரங்களில் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலா 45 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு 868 வாக்குசாவடிகள் உள்ளன. இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 3 தொகுதிகளுக்கும் தலா 45 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் ஆகியவை அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு திறக்கப்பட்டது. தொகுதி வாரியாக தலா 45 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் இருந்து கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் ஆகியவை கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்ேபாது 1508 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1140 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1197 விவிபேட் என மொத்தம் 3845 இயந்திரங்கள் உள்ளன. இதனிடையே, மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தலா 45 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வேட்புமனு தாக்கல் இறுதி நாளன்று மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு பாதுகாப்பாக வைக்கப்படும். வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஊட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப் கலெக்டருமான மோனிகா ராணா, கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் முகமது குதுரதுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: