நித்திய கல்யாண பெருமாள் கோயில் தெப்ப திருவிழாவில் தீ விபத்து

காரைக்கால், மார்ச் 3: காரைக்காலில் கைலாசநாதர் கோயிலின் எதிர்புறத்தில் நித்திய கல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசி மாத பிரமோற்சவத்தையொட்டி தெப்ப திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. சந்திரதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் நித்திய கல்யாண பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பிறகு தெப்ப உற்சவம் நடந்தது. இதில் காரைக்கால், கோட்டுச்சேரி, திருநள்ளாறு, நெடுங்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்திருந்து குளத்தை சுற்றிலும் நின்று தெப்ப உற்சவத்தை கண்டுகளித்து நித்திய கல்யாண பெருமாளை வழிபட்டனர்.

குளத்தில் தெப்பம் சுற்றி வரும்போது வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அப்போது வெடித்து சிதறிய வெடிகள் கோயிலின் பின்புறத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் அங்கு வளர்ந்திருந்த செடி, கொடிகளில் தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதன் காரணமாக தெப்ப உற்சவம் நடைபெறும் குளம் அருகில் பெரும் புகைமண்டலம் உருவானது. உடனடியாக போலீசார், அங்கிருந்த பக்தர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர் . இதன் காரணமாக தீவிபத்து தடுக்கப்பட்டதுடன் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Related Stories: