மீன்பிடி சீசன் துவக்கம் அதிகளவில் மீன்கள் சிக்கியதால் கோடியக்கரை மீனவர்கள் மகிழ்ச்சி

வேதாரண்யம், மார்ச் 3: மீன்பிடி சீசன் துவங்கியதால் கோடியக்கரை கடல் பகுதியில் அதிகளவில் மீன்கள் கிடைத்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோடியக்கரையில் இருந்து 100க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்று நேற்று காலை மீனவர்கள் கரை திரும்பினர் . மீனவர்களது வலையில் இறால், நண்டு, சிங்கிறால், திருக்கை மீன், பண்ணா, போத்தல், நீலக்கால் நண்டு, வாவல், காலா, சங்கரா, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதிகளவு சிக்கியது. இதனால் மீனவர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீன்வரத்து அதிகரித்துள்ளதால் கோடியக்கரை கடற்கரை பகுதியில் உள்ள மீன் ஏலம் விடும் பகுதியில் கூட்டம் அலைமோதியது. அதிகளவில் கோடியக்கரையில் மீன்கள் கிடைத்தாலும் கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதால் கேரளாவுக்கு நாள்தோறும் ஏற்றுமதியாகும். ஆனால் தற்போது ஏற்றுமதி ஆகவில்லை. இதனால் உள்ளூர் சந்தையில் மட்டுமே மீன்கள் விற்பனையாகின்றன. இதனால் போதுமான விலை கிடைக்கவில்லை. கேரளாவில் தவக்காலம் முடிந்த பிறகு தான் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: