×

நாகை மாவட்டத்தில் நாளை முதல் திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்கள் தங்க அனுமதி கிடையாது

நாகை, மார்ச் 3: தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாளை முதல் திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்கள் தங்க அனுமதி கிடையாது என்று நாகை கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார். நாகை கலெக்டர் பிரவீன்பிநாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாய கூடங்களை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும்போது அதன் விபரத்தை உடனே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தாசில்தார்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாய கூடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், வேட்டி சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. வளைகாப்பு, பிறந்த நாள் விழாக்கள், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளின் பெயரில் கல்யாண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கல்யாண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து அளிக்கப்படுவது சட்டப்படி குற்றமாகும். கோயில் பூஜை, அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது அவர்கள் முகவர்களோ வாக்காளர்களுக்கு விருந்து உபசரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெற ஏதுவாக கல்யாண மண்டபம், சமுதாய கூட உரிமையாளர்கள் கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்ய வரும் நபர்களிடம் திருமண பத்திரிக்கை, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று முன்பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவு குறித்த விவரங்களை உரிய பதிவேடுகளில் முறையாக பரமாரிக்க வேண்டும். சந்தேகம் ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டால் அவை குறித்த தகவல்களை உடனே அருகில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். நாளை (4ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் யாரும் கல்யாண மண்டபங்களில் தங்க அனுமதி தரக்கூடாது. சட்டமன்ற தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nagai district ,
× RELATED கீழ்வேளூர் வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்