வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணிக்க 6 கிராம மக்கள் முடிவு

நாகை, மார்ச் 3: நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான பிரவீன்பிநாயருக்கு எண்ணெய் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் சங்க பொது செயலாளர் விஜயராஜ் தலைமையில் மனு அனுப்பப்பட்டது.  அதில் ஐஓசி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த அடிப்படையில் கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி நிரந்தர பணி வழங்காமல் மேல்முறையீடு செய்துள்ளபோது ஓராண்டு காலமாக ஊதியமும் வழங்காத நிறுவனத்தை கண்டிப்பது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் (சிபிசிஎல்) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி இழப்புக்கு ஆளாக்கிய நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஊதியம் இல்லாமல் தெருவில் நிற்கும் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்காததை கண்டிப்பது.

நாகை அருகே ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அமைவதற்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நிலம் அளித்த முட்டத்தில் வசிக்கும் விவசாயிகளின் வாரிசுதாரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படியும், நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதியின்படி பணி வழங்காததை கண்டிப்பது. தற்போது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் (சிபிசிஎல்) நிறுவன விரிவாக்கத்துக்காக எங்கள் பகுதியில் வாழ்வாதாரமாக விளங்குகிற மீதமுள்ள விவசாய நிலங்களையும் கையகப்படுத்தும் போக்கை கண்டித்து ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போகிறோம். இதில் பனங்குடி, பூதங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், கோபுராஜபுரம், முட்டம் என 6 கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்குகள் செலுத்த மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: