50 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல காத்தாயி அம்மன் கோயிலுக்கு வருகை தரும் 5 சுவாமி சிலைகள்

சீர்காழி, மார்ச் 4: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மன்னங்கோயில் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான நல்ல காத்தாயி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த 9 ஐம்பொன் சிலைகள் மாயமானது. இதைதொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நல்ல காத்தாயி அம்மன் கோயில் சிலைகள் குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை கோயில் குலதெய்வ காரர்கள், ஏனாகுடி வீரமணி தலைமையில் கேட்டிருந்தனர். அதன் அடிப்படையில் நல்ல காத்தாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 5 கோடி மதிப்புள்ள 5 சிலைகள், திருமயிலாடி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாதுகாப்பு நலன் கருதி வைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து 5 சிலைகளை காத்தாயி அம்மன் கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து வரும் 10, 11, 12ம் தேதிகளில் சுப்பிரமணியர், தெய்வானை, வள்ளி, பிடாரி, ஐயனார் ஆகிய 5 சிலைகள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படவுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல காத்தாயி அம்மன் கோயிலுக்கு சிலைகள் வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் கோயிலில் இருந்த 9 சிலைகளில் 5 சிலைகள் மட்டுமே இருப்பதால் மேலும் 4 சிலைகள் எங்குள்ளது, கோயிலுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு என்ற விவரங்களை அறிந்து கொள்ள நீதிமன்றத்தில் பக்தர்கள் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: