கேரளா, தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடப்பதால் முறைகேட்டை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை

கோவை, மார்ச் 3: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் அனைத்தும் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் அரசியில்  விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில இடங்களில் விடுபட்டிருந்த டிஸ்பிளே மெட்டிரியல்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகள் இன்று (நேற்று) முதல் தீவிரமாக தங்களது பணிகளை மேற்கொள்வார்கள். கோவை மாவட்டத்தில் செலவினக் கண்காணிப்புக்காக 30 பறக்கும் படை குழுக்கள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 20 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தேவைக்கு ஏற்ப மீண்டும் அதிகப்படுத்தப்படும். இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் சமயத்தில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள், அவர்களின் விருப்பத்தின் பேரில் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்படும்.  இக்குழுக்கள் வரும் 16ம் தேதிக்குள் வாக்காளர்களிடம் தபால் வாக்கு பெறுவதற்காக படிவம் 12டி பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது வாக்குச் சாவடி அலுவலரிடம் அளிப்பார்கள்.

கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 64 ஆயிரத்து 650 பேர் உள்ளனர்.  20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு தபால் வாக்கு இருந்தால் அதனை செயல்படுத்துவோம். கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தலை காட்டிலும் 1085 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படுகிறது. கடந்த முறை 975 மையங்கள் இருந்தன. இந்த முறை 1085 மையங்கள் உள்ளன. கூடுதலாக 106 மையங்கள் உள்ளன. இவற்றில் பெருவாரியாக மாநகராட்சி பகுதியில் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு மற்றும் வாக்குச்சாவடிகளின் தூரத்தை குறைக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய்துறையினர் அறிக்கைப்படி 788 வாக்குச்சாவடிகள் 112 மையங்களில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. கூடுதலான வாக்குக்காளர்கள் ஒரே மையத்தில் வரக்கூடிய சூழ்நிலையில்தான் இது பதற்றமானவை. சட்டம் ஒழுங்கில் பதற்றமான வாக்குச்சாவடிகள் இல்லை.

சுதந்திரமான வெளிப்படையான தேர்தல் நடத்த உள்ளோம். சந்தேகங்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை 24 நேரமும் செயல்படும். சிவிஜில் செயலி மூலமும் புகார் அளிக்கலாம். இதுவரை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலம் 85 புகார்கள் வந்துள்ளது. இந்த புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை, முதியோருக்கான தபால் வாக்கு தொடர்பான தகவல்களை கேட்கவும், விளம்பர பதாதைகள், பரிசு பொருட்கள் விநியோகம் தொடர்பான புகார்களை அளிக்கவும் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. தேர்தல் நடத்தை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். பரிசு பொருட்கள் உள்ளிட்டவை விநியோகித்தால் சீல் வைக்கப்படும். மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 15 புகார்கள் வந்துள்ளன. புகார்கள் தருபவர்களுக்கு தேவைப்பட்டால் பாதுகாப்பு கொடுக்கப்படும். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வசதிக்காக வாலண்டியர்ஸ் நியமிக்கப்படுவார்கள். வாக்குச்சாவடிகளில் வீல் சேர்கள் வைக்கப்படும்.

 

கோவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின. இந்த முறை சட்டமன்ற தேர்தலில்  என்.ஜி.ஒ.க்கள், தன்னார்வலர்கள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுத்துச் செல்லும்போது ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும். இதனை கண்காணிக்க நொடல் ஆபிசர்கள் நியமிக்கப்படுவார்கள்.  வியாபாரிகளை சொந்தரவு செய்யக்கூடாது என்பதையும் கவனமாக இருக்கிறோம்.

டாஸ்மாக் கடைகளில் பல்க்காக மது வாங்கக்கூடாது, விற்பனை கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க நொடல் ஆபிசர் நியமிக்கப்படுவார். கல்யாண மண்டபம், ஓட்டல் உள்ளிட்டவற்றில் கூட்டம் நடத்த உரிய அனுமதி பெற வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும், அரசியல் கட்சியினர் தங்க ஏற்பாடு செய்யப்படும்.  வனத்துறை தகவலின்படி சுமார் 50 வாக்குச்சாவடிகள் வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. அங்கு சிரமங்களை தவிர்க்க காவல்துறையினர், வருவாய் அலுவலர்கள் இருக்கிறார்கள்.  கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கேரளா மாநில எல்லைப்பகுதியை ஒட்டி உள்ளது. 2 மாநிலங்களிலும் பொதுத் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் விதிமுறைகளை மீறாமல் இருக்க, முறைகேடுகளை தடுக்க கேரளா பாலக்காட்டில் அந்த மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார். அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மாவட்ட எஸ்பி. அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: