மாவட்டத்தில் 600 பழங்குற்றவாளிகள் மீது நடவடிக்கை

ஈரோடு, மார்ச் 3:  ஈரோடு மாவட்டத்தில் 873 பழங்குற்றவாளிகளில் 600பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பி., தங்கதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரோடு எஸ்பி., தங்கதுரை நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 939 இடங்களில் 2,741 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், பதற்றமான 192 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களாக ஈரோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி மற்றும் கோபி கலை கல்லூரி என 2 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், பெருந்துறை என 6 தொகுதிகளும், கோபி கலை அறிவியல் கல்லூரியில் கோபி, பவானிசாகர் என 2 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதில் நிர்வாக வசதிக்காக மாற்றங்கள் இருப்பின் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பார். ஈரோடு மாவட்டத்தில் இரண்டு மாநில எல்லை சோதனை சாவடிகளும், எட்டு மாவட்ட சோதனை சாவடிகளும் உள்ளன. தேர்தலையொட்டி, பர்கூர் தட்டக்கரை, தாளவாடி எல்லக்கட்டை, புளிஞ்சூர் போன்ற பகுதிகளில் கூடுதலாக சோதனை சாவடி அமைக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவத்தினர் 92பேரை கொண்டு, இன்று (நேற்று) கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதேபோல், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அணிவகுப்பு நடத்தப்படும்.

 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் கேரளா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதைபோல, தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கர்நாடகா மாநில போலீசாரும், கூடுதல் துணை ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல் படையினர், என்.எஸ்.எஸ். மாணவர்கள் என 3,500பேர் ஈடுபட உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பழங்குற்றவாளிகள் 873பேர் உள்ளனர். குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 351பேர், சட்டம் ஒழுங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 522பேர் அடங்குவர். இதில் 90பேர் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 600 பேர் நன்னடத்தை விதிமுறைகளின் படி ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்

Related Stories: