தனியார் வங்கி நில அபகரிப்பு செய்து விட்டதாக அரிசி ஆலை உரிமையாளர் எஸ்பி. யிடம் புகார்

ஈரோடு,  மார்ச் 3:  ஈரோட்டில் தனியார் வங்கியினர் நில அபகரிப்பு செய்து விட்டதாக,  அரிசி ஆலை உரிமையாளர் ஈரோடு எஸ்பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார். ஈரோடு  மாவட்டம் கொடுமுடி தாலுகா வடுகனூர் வெள்ளோட்டம் பரப்பை சேர்ந்த சுந்தரம்  மகன் தனவேல் (45). இவர் நேற்று ஈரோடு எஸ்பி. அலுவலகத்தில் எஸ்பி. தங்கதுரையிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:  நான்  நடுப்பாளையத்தில் அரிசி ஆலையை நடத்தி  வருகிறேன். ஈரோட்டில் இயங்கி வரும் தனியார் வங்கியில் ரூ.5 கோடியே 18 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இந்த கடன் தொகையில்  ரூ.95 லட்சத்து 32 ஆயிரத்து 783 மட்டுமே பாக்கி வைத்திருந்தேன். கடன் தொகையை  முழுவதுமாக கட்டுவதாக, கடந்த ஜனவரி 7ம் தேதி வங்கி மேலாளருக்கு கடிதம்  அனுப்பினேன். அதற்கு வங்கியினர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி அனுப்பிய பதில்  கடிதத்தில், கடன் தொகை முழுவதும் செலுத்தினாலும், அடமான பத்திரத்தை ரத்து  செய்து கொடுக்க இயலாது என எழுத்து மூலம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில்  எனது நிலத்திற்கான விற்பனை நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீசில்  22-1-2021 தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பணத்தை செலுத்த  உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால், இந்த கால அவகாசத்தை பொருட்படுத்தாமல்,  வங்கியின் மேலாளர் மற்றும் துணை மேலாளர் எனது நிலத்தை அபகரித்து, மூன்றாம்  நபர் ஏலம் எடுக்க வசதியாக செயல்பட்டு உள்ளனர். நான் முழு தொகையும் செலுத்த  தயாராக இருந்தபோதும், ரூ.2 கோடி மதிப்புள்ள எனது சொத்தை வேறும்  ரூ.28 லட்சத்திற்கு விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர். இது குறித்து  கேட்டால், செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, வங்கியின்  மேலாளர் மற்றும் துணை மேலாளர் மீது பொருளாதார மோசடி, நில அபகரிப்பு  பிரிவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Related Stories:

>