×

தேர்தல் கெடுபிடியால் வியாபாரிகள் வரவில்லை ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிப்பு

ஈரோடு, மார்ச் 3: தேர்தல் கெடுபிடிகளால் வெளியூர் வியாபாரிகள் வராததால், ஜவுளி சந்தையில் நேற்று வியாபாரம் பாதிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம். இது தவிர உள்ளூர் வியாபாரிகளும் கலந்து கொள்வார்கள்.  இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு வந்தால் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்வதாலும், ஆங்காங்கே வாகன சோதனைகள் மேற்கொள்வதாலும், நேற்று நடந்த ஜவுளி சந்தைக்கு வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், ஜவுளி சந்தையில், சுமார் 30 சதவீத வியாபாரம் மட்டுமே நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி பணம் பறிமுதல் செய்வதும், அதையும் மீறி ஜவுளி சந்தையில் இருந்து வேட்டி, சேலைகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்றால், வாக்காளர்களுக்கு இலவசமாக கொடுப்பற்கு என்று கூறி அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. வியாபாரத்திற்கு தான் ஜவுளி சந்தையில் வாங்கி செல்கிறோம் என்பதை நிரூபித்து பறிமுதல் செய்யப்பட்ட ஜவுளிகளை திரும்ப பெறுவதற்குள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. பணம் பறிமுதல் செய்தால், அந்த பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அச்சப்பட்டு வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வருவதில்லை. இதனால், நேற்று 30 சதவீத வியாபாரம் தான் நடந்துள்ளது. இனி வரும் வாரங்களில் தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளால், மேலும் வியாபாரம் பாதிக்கும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Tags : scandal ,
× RELATED உபியில் நடந்த முறைகேடு அம்பலம் கூட்டு...