கோடைகாலம் துவங்கியதால்

க.பரமத்தி, மார்ச்.3: கோடை காலம் துவங்கி உள்ளதால் முடிந்தவரை பழ வகைகளை அதிகமாக உண்ணுவதுடன் அசைவ உணவு வகைகளை கூடுமான வரை தவிர்க்குமாறு மூலிகை சித்தரும் குச்சிசாமி பிருந்தாவன மடாதிபதியான காளிதாஸ் சுவாமிகள் அறிவுரை கூறி உள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் அதிக ஊராட்சிகளை கொண்ட ஒன்றிய வரிசையில் முதலிடத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் 30-ஊராட்சிகளில் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புதான தொழிலாக செய்து பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய மழையில்லாமல் விவசாயம் இல்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த மழைக்கு பிறகு தற்போது வரை மழை இல்லை இதனால் விளைநிலங்கள் வறண்டு கிடப்பதை காணமுடிகிறது. தற்போது கோடை வெயில் தாக்கம் தற்போதே வந்து விட்டது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நட மாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு நோய் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வழி முறைகள் குறித்து சமூக ஆர்வலரும் மூலிகை சித்தரும் குச்சிசாமி பிருந்தாவன மடாதிபதியுமான காளிதாஸ் சுவாமிகள் கூறியதாவது: கோடை காலங்களில் உப்பு, புளிப்பு, கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். பருத்தி உடைகளை அணிய வேண்டும். இரவில் மெத்தையில் படுக்காமல் தரையில் பெட் ஷீட் விரித்து படுத்து உறங்க வேண்டும். காலை உணவாக கம்மங் கூழ், ராகி போன்றவற்றை உண்ண வேண்டும். வாசலில் மஞ்சள் தெளித்து வைத்தால் சூட்டை குறைக்கும். சீரக தண்ணீர் அருந்த வேண்டும். அசைவ உணவுகள் உடல் ஒத்துழைப்புக்கு ஏற்றவாறு சாப்பிடவும் அல்லது கூடுமான வரை தவிர்க்க வேண்டும். கொத்த மல்லி தழை சட்னி, புதினா மற்றும் இஞ்சி சட்டினிகளை சேர்த்து கொள்ளலாம். மதியம் வேளைகளில் அரிசி சாதம் குறைந்த அளவும், காய்கறி களை அதிகளவும் சேர்த்து கொள்ள வேண்டும். கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். நார் சத்து மற்றும் நீர் சத்து அதிக முள்ள சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, கேரட், பீட் ரூட் ஆகியவற்றை அதிகளவு உட் கொள்ளலாம். நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா போன்ற பழ வகைகளை அதிகமாக சாப்பிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: