- நெல்லை பல்கலைக்கழகம்
- 7 வது ஊதியம் ஆணைக்குழு
- நெல்லை
- நெல்லை கலெக்டர்
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
- ராதாகிருஷ்ணன்
- நெல்லை ஜனாய்
- இ. என்.
- மரிக்கனி
நெல்லை, மே 19: 7வது ஊதிய கமிஷன் வழங்கிய ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மறுப்பதாக நெல்லை கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவால் பரபரப்பு நிலவியது. நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மாரிக்கனி. மாற்றுதிறனாளியான இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை நேரில் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். மனு விவரம்: எனது கணவர் ராதாகிருஷ்ணன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2008ம் ஆண்டு முதல் காலமுறை ஊதியம் அடிப்படையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். யூஜிசியின் 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை எனது கணவரை போல் பல ஊழியர்கள் பெற முடியாத நிலை உள்ளது. நெல்லை பல்கலைக்கழக நிர்வாகம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வைத்துக் கொண்டு காலம் கடத்தி வருகிறது.
எனது கணவரின் பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையிலும் நிதிக்குழு அனுமதி தேவை எனக்கூறிக் கொண்டு ஊதியத்தை தர மறுக்கின்றனர். எனது கணவருக்கு 22 மாதங்களுக்கான சம்பளம், இதுவரை வழங்கப்படாமல் நிலுவையாக இருந்து வருகிறது. எனது கணவர் மற்றும் அதே நிலையில் பணியாற்றும் 7 ஊழியர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவானது நிதியை நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கிறது. சட்டசபை தேர்தல் வருவதற்கு 7 மாதங்கள் முன்பாகவே, பல்கலைக்கழக மானியக்குழுவானது, அனைத்து நிதியையும் பதிவாளருக்கு அனுப்பி வைத்து விட்டது. மாற்றுத்திறனாளியான நானும், எனது கணவரும் குழந்தைகளை காப்பாற்றவும், அவர்களது கல்விக்கு போதிய வருவாயின்றியும் திண்டாடுகிறோம். எனவே நெல்லை பல்கலைக்கழகத்தில் எனது கணவர் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் 7வது குழு பரிந்துரை செய்த ஊதியத்தை வழங்கிட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் வலியுறுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து நெல்லை அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் தனியார் உணவகத்தின் அருகே மிகப்பெரிய பள்ளம் காணப்படுகிறது. அந்தப் பள்ளம் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது. வாகன ஓட்டிகளும் இந்த பள்ளத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
