கேளம்பாக்கம் அருகே பரபரப்பு தொழிலதிபர் ஓடஓட வெட்டிக் கொலை: கூலிப்படைக்கு போலீஸ வலைவீச்சு

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே தொழிலதிபர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் பெரிய தெருவை சேர்ந்தவர் பொன்னப்பன் (48). இவர், அரிசி ஆலை மற்றும் வணிக வளாகம் நடத்தி வந்தார். இவரது மனைவி திருமலை தேவி (45). இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னப்பன், பொன்மார் கிராமத்தில் வேங்கடமங்கலம் பகுதியில் நடந்த உறவினரின் திருமண விருந்துக்கு சென்றுவிட்டு, பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது நான்கு முனை சந்திப்பு அருகே வந்தபோது, அவரை வழி மறித்த 2 பேர், ஒரு முகவரியைக் காட்டி வழி கேட்பதுபோல பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு வந்த 2 பேர், பொன்னப்பனை கீழே தள்ளி சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய பொன்னப்பனை, மர்ம நபர்கள் விரட்டி சென்று ஓட ஓட வெட்டினர். இதில் தலை, முகம், கழுத்து, முதுகு உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்ததில் அவர் மயங்கி விழுந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்நிலையில் பொன்னப்பனை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பொன்னப்பனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து, தாழம்பூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்னப்பனுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்தது. அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். இவர்கள் கூலிப்படையாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

Related Stories:

>