×

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

குன்றத்தூர்: தாம்பரத்திலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி நேற்று பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கம் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை உடைத்து கொண்டு, சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதை கண்டதும், அவ்வழியே சென்ற பிற வாகன ஓட்டிகள், உடனடியாக தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடிச்சென்று லாரியில் மாட்டிக்கொண்டிருந்த ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி ஓட்டுநர் உயிர் தப்பினார். தகவலறிந்த  பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து 3  ராட்சத கிரேன் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், சாலையோரம் கவிழ்ந்த லாரியை மீட்டனர். நீண்ட நேரம் நடந்த இந்த மீட்கும் பணியால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விசாரணையில், அதிக பாரம் ஏற்றி, வேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.

Tags : Vandalur ,Minjoor Outer Ring Road ,
× RELATED வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட...