அனுமதி ஓரிடம் அள்ளுவதோ வேறிடம் அரசு மண் குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர்: அனுமதி பெற்ற இடத்தைவிட்டு, வேறு இடத்தில் விதியை மீறி, 10 அடிக்கு மேல் மண் அள்ளியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி, செங்கரை,  பாலவாக்கம் ஆகிய கிராம மக்கள், திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையாவிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் ஏரியில் கடந்த ஒரு வாரமாக அரசு மண் குவாரி இயங்குகிறது. மண் எடுக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் 3 அடிக்கு பதிலாக விதியை மீறி 10 அடிக்கு மேல் மண் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அனுமதி பெற்ற சர்வே எண் 296 பகுதியில் மண் எடுக்காமல், கிராமத்தை ஒட்டியுள்ள சர்வே எண் 301 பகுதியில் மண் அள்ளப்படுகிறது. இதனால், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு ஏரிப்பாசனம் பாதிக்கும். மேலும், நிலத்தடிநீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>