வாலிபர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

திருச்சி, மார்ச் 2: திருச்சி ரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(23), இவர் நேற்று முன்தினம் வெளியே சென்றுவிட்டு தனது பைக்கில் வந்தவர் வீடு அருகே நிறுத்தினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சசிகுமார்(46), ராஜா(40) ஆகியோர் அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது கார்த்திக்கின் பைக் சசிகுமார் காலில் மோதியது. இதில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதில கார்த்திக்கை இருவரும் சேர்ந்து அடித்து, கத்தியால் குத்தினர், காயமடைந்த கார்த்திக் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாாின் போில் உறையூர் போலீசார் சசிகுமார், ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி தற்கொலை: திருச்சி ரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(42), வண்ணத்துப்பூச்சி பூங்கா கூலி தொழிலாளி. இவர் தினமும் குடித்துவிட்டு வருவதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கடந்த 27ம் தேதி குடித்துவிட்டு வந்ததால், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மகேந்திரன் மனைவியின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ரங்கம் எஸ்ஐ மோகன்ராஜ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

வாலிபர் மர்ம சாவு: திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார்(60), துப்புரவு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பொன்மலை ஆர்மரிகேட் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அசைவின்றி கிடந்தார். இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதில், வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த விசாரணையில் அவர் திருச்சி தெற்கு காட்டூர் தஞ்சை மெயின் ரோட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம்(35) என்பதும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனால் அவர் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து இறந்தாரா என்பது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணல் கடத்திய 2 பேர் கைது: மணப்பாறை அருகே விடத்திலாம்பட்டி ஆற்றுப்பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மணல் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அப்பகுதியில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் மணலுடன் லாரியில் தப்ப முயன்றனர். வேகமாக சென்ற லாரி நிலைதடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் லாரியிலிருந்து 2 பேர் தப்பியோடினர். இதனையடுத்து லாரியை கைப்பற்றிய போலீசார் தப்பியோடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று லாரி உரிமையாளர் கரும்புளிபட்டியை சேர்ந்த பழனியப்பன் மகன் அண்ணாவி(28), அதே பகுதியை சேர்ந்த மணிவேல் மகன் சுரேஷ்(20) ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடுகள் திருட்டு: 2 பேர் கைது: துறையூர் அருகே கோட்டப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பாநதி(55). இவருக்கு சொந்தமான 3 ஆடுகளை நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இதனையடுத்து ஆடுகளை தேடிய சம்பாநதி நாமக்கல் மாவட்டம் பவித்திரத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு சென்று பார்த்தார். அங்கு இருவர் சம்பாநதிக்கு சொந்தமான ஆடுகளை விற்க வைத்திருப்பது தெரிந்தது. இதனையடுத்து இருவரையும் பிடித்துக்கொண்டு தனது ஆடுகளையும் மீட்டு உப்பிலியபுரம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் நாகலாபுரத்தைச் சேர்ந்த சசிக்குமார்(27), உப்பிலியபுரம் அருகே காஞ்சேரிமலைப்புதூர் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த பாலமுருகன்(32) என்பதும், ஆடுகளை திருடி விற்க வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். திருடப்பட்ட 3 ஆடுகளும் ஆட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

லாட்ஜில் விபசாரம்: 2 பெண்கள் மீட்பு: ரங்கம் கீழ சித்திரை வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் மாணிக்கம் பிள்ளை தெருவை சேர்ந்த மணிகண்டன்(32) என்பவர் வேலை செய்து வருகிறார். இங்கு நேற்று முன்தினம் ஏர்போர்ட் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவர் ரங்கம் சித்திரை வீதியை சேர்ந்த 2 பெண்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி விபசாரத்தில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் சம்பவயிடம் சென்று 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த லால்குடி அரியமங்கலத்தை சேர்ந்த 30 வயதுடைய 2 இளம்பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்புரவு  பெண் ஊழியர் தற்கொலை: திருச்சி எ.புதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் பாக்யராஜ் மனைவி செல்வி (37). கடந்த 7 ஆண்டாக மாநகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இதில் பால்வாடி தெருவில் உள்ள முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த முருகன் மனைவி பூமாரி, அடிக்கடி செல்வியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் செல்வியின் மூத்த மகனிடம் நேற்று முன்தினம் உன் தாயை கண்டித்து வைக்குமாறு பூமாரி கூறியுள்ளார். இதுகுறித்து பாட்டி சரசுவிடம் கூறி செல்வி மகன் அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாட்டி சரசு, பூமாரி வீட்டிற்கு சென்று ஏன் பேரன்களிடம் கூறுகிறாய் என கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சரசுவை பூமாரி அண்ணன் பொன்மாரி சரமாரி தாக்கினார். இதுகுறித்து அறிந்த செல்வி, தாயை தாக்கிவிட்டார்களே என மனவேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த எ.புதூர் போலீசார் செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

பெண் மாயம்: திருச்சி காஜாபேட்டை கீழ கிருஷ்ணர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பாத்திமாபானு (37). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் திடீர் திடீரென காணாமல் போவதும், பின்னர் வீட்டிற்கு திரும்புவதுமாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாயமான பாத்திமாபானு பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>