×

திருமண மண்டபம், விடுதி உரிமையாளர்களுக்கு

திருச்சி, மார்ச் 2: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது தேர்தலையொட்டி கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சிவராசு தெரிவித்ததாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும்போது அதன் விபரத்தை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தாசில்தார்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக்கூடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், வேட்டி-சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கல்யாண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. கல்யாண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டால் சட்டப்படி குற்றமாகும். கோயில் அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ வாக்காளர்களுக்கு விருந்து வைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் வாக்காளரை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் வாக்களிப்பதை வெகுவாக தடைசெய்கின்றன.

எனவே கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்ய வரும் நபர்களிடம் திருமண பத்திரிகை, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று முன்பதிவு செய்யவும். முன்பதிவு குறித்த விவரங்களை உரிய பதிவேடுகளில் முறையாக பராமரிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படின் அவை குறித்த தகவல்களை உடனடியாக அருகாமையிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தாசில்தார்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். ஏப்ரல் 4ம்தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் எவரும் கல்யாண மண்டபங்களில் தங்கிட அனுமதி தரக்கூடாது. விதிமுறைகளின்படி சட்டமன்ற பொது தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், டிஆர்ஓ பழனிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சியில் இன்று மின்தடை