முசிறி சப் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகள் பற்றி அனைத்து கட்சி கூட்டம்

முசிறி, மார்ச் 2: முசிறி சப்கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முசிறி சப்-கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜோதிசர்மா தலைமை வகித்து தேர்தல் நடைமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி விரிவாகப் பேசினார். நேர்முக உதவியாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி வளாகங்களில் கட்சி அலுவலகங்கள் அமைக்கக்கூடாது. கட்சி அலுவலகங்கள் அமைப்பதற்கான அனுமதியை இணையதளம் வாயிலாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது கூட்டம் நடத்தும் இடம், நாள் உள்ளிட்ட விபரங்களை முன்கூட்டியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடையாணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளை முன்னரே அறிந்து அதற்கு ஏற்றவாறு பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தினை தேர்வு செய்திட வேண்டும். பொதுக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை அப்புறப்படுத்த போலீசாரின் உதவியை பெறவேண்டும். சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது. வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி பெறாமல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>