முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் தட்டிக்கேட்ட மனைவிக்கு மிரட்டல் தெலங்கானா இன்ஜினியர் மீது வழக்கு

திருச்சி, மார்ச்2:  முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட மனைவிக்கு மிரட்டல் விடுத்த தெலங்கானா இன்ஜினியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராமசந்திராபுரம் பெல் எல்ஐசி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (41). பிஇ படித்துள்ள இவர், மஸ்கட்டில் திட்ட இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு தனியார் டாட்காம் மூலம் திருச்சி தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த அன்பழகன் மகள் சித்ரா(45) என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், 2017ல் சித்ராவை மஸ்கட் அழைத்து சென்றார். அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அனில்குமாரின் செல்போனை ஆய்வு செய்தபோது, கணவர் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இருந்ததால் சித்ரா அதிர்ச்சி அடைந்தார். விசாரித்தபோது ஏற்கனவே அனில்குமாருக்கு மஸ்கட்டை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் சித்ராவுக்கும், கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2019ல் ஒருமுறை சித்ராவை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு, முதல் மனைவியை பார்க்க அனில்குமார் சென்று விட்டாராம். இதனால் 2019ல் சித்ரா திருச்சி தென்னூரில் உள்ள தாய் வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டார்.

தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும், விவகாரத்து கேட்டும் ரங்கம் நீதிமன்றத்தில் சித்ரா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் தென்னூர் பகுதியில் சித்ரா நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அனில்குமார், வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி, சித்ராவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றியும் சித்ரா நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிபதி உத்தரவுப்படி ரங்கம் மகளிர் காவல் நிலைய எஸ்ஐ நளினி, அனில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

>